This Article is From Aug 13, 2019

திருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

கூச்சலிட்ட சத்ததைக் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, திருடர்களை பார்த்து பதறுகிறார். இருப்பினும், சமர்த்தியமாக கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி எறிந்து, கொள்ளையர்களை விரட்ட முயற்சிக்கிறார்.

வயதான தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்தே திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

Tirunelveli:

நெல்லையில், கொள்ளையர்கள் இருவரை, வயதான தம்பதியர் துணிச்சலாக போராடி துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சியில், சண்முகவேல் 70, தனது தோட்டத்தின் வீட்டின் வாசலில் அமர்திருந்தார். அப்போது, திடீரென அங்கு முகமூடி அணிந்து வந்த 2 கொள்ளையர்களில் ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்க முயற்சி செய்கிறார். 

அப்போது அவர் கூச்சலிட்ட சத்ததைக் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, திருடர்களை பார்த்து பதறுகிறார். இருப்பினும், சமர்த்தியமாக கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி எறிந்து, கொள்ளையர்களை விரட்ட முயற்சிக்கிறார்.

இதனால், திருடர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். இந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட சண்முகவேல், திருடனின் பிடியில் இருந்து விலகி, அவரும் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் மீது தூக்கி எறிகிறார். அதன் பின்னரும் அங்கிருந்து ஓடாத கொள்ளையர்கள், அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். 

ஆனாலும் அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத கணவனும், மனைவியும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தூக்கி கொள்ளையர்கள் மீது வீசுகின்றனர். இதைத்தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட திருடர்கள் செந்தாமரை கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை மட்டும் பறித்து கொண்டு தப்பி ஒடி சென்றனர். இந்த பரபரப்பான காட்சிகள், வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் முதியவர் செந்தாமரைக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. எனினும், கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டிய இந்த வயதான தம்பதியை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வயதான தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்தே திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர், வீட்டு பணிப்பெண் உட்பட 3 பேரும் வீட்டில் இருந்த போது, வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் துணையுடன் கொலையாளியை விரைந்து பிடித்தனர். தொடர்ந்து, கொலையாளியை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.