GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 விமானம், நாக்பூரில் இருந்து கடந்த திங்கட் கிழமை டேக்-ஆஃப் ஆகியுள்ளது.
Bengaluru: 180 பயணிகளுடன் பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் நிலைதடுமாறி சென்ற விமானம் ஒன்று, அபாயகரமான முறையில் டேக்-ஆஃப் ஆகியுள்ளது. விமானத்தை இயக்கிய பைலட்டை அரசு தரப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது. பதறவைக்கும் இச்சம்பவம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்துள்ளன.
GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 விமானம், நாக்பூரில் இருந்து கடந்த திங்கட் கிழமை டேக்-ஆஃப் ஆகியுள்ளது. பெங்களூருவில் அந்த விமானம் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், விமானம் லேண்ட் ஆகும்போது, நிலைதடுமாறி ரன்-வேக்கு அருகிலிருந்த புல்வெளிக்கு சறுக்கிச் சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து பைலட், விமானத்தை டேக்-ஆஃப் செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் லேண்ட் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
விமானம் பெங்களூருவிலிருந்து மீண்டும் அவசர கதியில் புறப்பட்ட போது, அதன் ஒரு இன்ஜின் பழுதடைந்த நிலையில் இருந்ததாக விமான ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ-வின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கோஏர் நிறுவனம், “11 நவம்பர், 2019 அன்று கோஏர் ஃப்லைட் ஜி8 811 நாக்பூரிலிருந்து பெங்களூருவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், பெங்களூருவிலிருந்து ஐதராபாத்திற்கு அந்த விமானம் இயக்கப்பட்டது. ஐதராபாத்தில் விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் சென்ற தடம்.
இந்த சம்பவம் நடந்போது விமானத்தில் பயணம் செய்த ஷஃபீக் அம்சா, NDTV-யிடம் தனது அனுபவம் பற்றி பகிர்ந்தபோது, “பெங்களூருவில் நாங்கள் தரையிறங்க உள்ள சில நிமிடங்களுக்கு முன்னர் வானிலை நன்றாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிலத்தில் நிலைமை வேறாக இருந்தது. விமானத்தை சரியாக லேண்ட் செய்ய முடியாத காரணத்தால், பைலட், மீண்டும் வானில் பறக்கத் தொடங்கினார்.
பின்னர் பைலட், பெங்களூருவில் லேண்ட் செய்ய முடியவில்லை என்பதை தெரிவித்தார். நான் ரன்-வேக்கு ஏதாவது ஆகியிருக்கும் என்று நினைத்தேன். புல் தரையில் அது சென்றிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்போது இந்த சம்பவம் இவ்வளவு திகிலைக் கிளப்பவில்லை. காரணம், எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதே சரியாக தெரிந்திருக்கவில்லை,” என்றார் வியப்புடன்.