பிரியங்கா காந்தியின் அறிக்கை எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை - பினராயி விஜயன்
Thiruvananthapuram: காங்கிரஸ் கட்சி எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார். அதில் அவர், 'இது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வு' என்று ராமர் கோவிலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து சிபிஎம் ஏற்கெனவே தனது நிலைப்பாட்டைத் தெளிவாக கூறிவிட்டது. நான் மீண்டும் அதைச் சொல்ல வேண்டியதில்லை. நாட்டில் கொரோனாவால் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை முதலில் பார்ப்போம். மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கருத்து எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. நீங்களும் இதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சி எப்போதும் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் முதல் இப்போது வரையில் காங்கிரஸ் வரலாறு இப்படிதான் இருக்கும்.
உண்மையில் காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கொள்கையில் இருந்தால், இந்தியாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. காங்கிரஸ் எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமைதியாக இருந்தது யார்? அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தது யார்?"
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.