கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 92 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- சமூக பரவல் நிலைக்கு கொரோனா சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின
- உள்ளூர் அளவில்தான் கொரோனா பரவல் இருப்பதாக மத்திய அரசு விளக்கம்
- கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
New Delhi: இந்தியாவில் கொரோனா பரவல் சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்கு சென்று விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இவற்றை மறுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவல், சமூக பரிமாற்றத்திற்கு இன்னும் செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சமூக பரிமாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இருப்பினும், 3-வது நிலையான சமூக பரிமாற்றத்திற்கு இந்தியா சென்று விட்டதென்று தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் நிலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
சமூக பரிமாற்றம் இந்தியாவில் எங்கேயும் நடக்கவில்லை. உள்ளூர்களில், சிறிய அளவில் கொரோனா பரவி வருகிறது. அபாய கட்டத்திற்கு கொரோனா பரவல் செல்லவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலை என்பது, இறக்குமதி நிலை. அதாவது பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருப்பதால் அங்கு சென்ற அல்லது அங்கு இருக்கும் இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது.
இரண்டாம் நிலை என்பது உள்ளூர் பரவல். அதாவது வெளிநாட்டில் கொரோனாவுடன் இந்தியாவுக்கு வந்த நபர், அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் கொரோனாவை பரப்புகிறார். இது குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மூன்றாவது நிலை என்பது, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று அவருக்கே தெரியாது. இவர் வெளிநாட்டிலிருந்து வராதவராக இருப்பார். ஆனால் அவர், மற்ற மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் கொரோனாவை பரப்பி விடுகிறார். இந்த நிலையின்போது, பாதிக்கப்பட்ட நபர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இத்தாலி, ஸ்பெயினில் ஏற்பட்டது இதுதான்.
நான்காவது என்பது பேரபாய நிலை. இதில், நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் கொரோனா பரவியிருக்கும். யாருக்கு எங்கிருந்து வந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை. சீனாவின் வுஹான் நகரில் இதுதான் ஏற்பட்டது.