மத்திய பட்ஜெட் இன்னும் ஒரு மாத காலத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயத் துறையில் கவனம் செலுத்தும் நோக்கில் அரசு பி.எம். கிசான் திட்டத்தை கையில் எடுத்துள்ளது
ஹைலைட்ஸ்
- அமைச்சரவை நேற்று முதன்முறையாக சந்தித்தது
- விவசாயத் திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாக தெரிகிறது
- வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கும் அமைச்சரவையில் ஒப்புதல்
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முதன்முறையாக சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள விவசாயிகள், வணிகர்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பி.எம்- கிசான் திட்டம் மூலம் ஏழை விவசாயிகளுக்கு 3 தவணைகளில் 6,000 ரூபாயைக் கொடுக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 15 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதபோல வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 3 கோடி வணிகர்கள் பயனடைவர் என்று கூறப்படுகிறது.
வணிகர்களுக்கான திட்டத்தின் மூலம் 2019-20 நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு, சுமார் 87,217.50 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தத் திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.
2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின் போது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டம் மூலம் 12 கோடி சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டது. 2 ஹெக்டர்கள் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றும் நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டின் போது அதிகாரபூர்வமாக பி.எம் கிசான் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டாலும், 2018 டிசம்பரின் போதே அது அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 பிப்ரவரியின் போது இந்தத் திட்டத்தின் முதல் தவணை விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டது.
அதேபோல பிரதான் மந்திரி கிசான் ஓய்வூதிய யோஜனா என்கின்ற திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள், தானாக முன்வந்து இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
இது குறித்து விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “இந்த ஓய்வூதியத் திட்டத்தில் விவசாயிகள் எவ்வளவும் தொகை செலுத்துகிறார்களோ அதே அளவுக்கான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும்” என்று கூறியுள்ளார்.
கிராமப்புறப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2018 - 19 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி-யில் விவசாயத் துறையின் பங்கு மிகக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பட்ஜெட் இன்னும் ஒரு மாத காலத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயத் துறையில் கவனம் செலுத்தும் நோக்கில் அரசு பி.எம். கிசான் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கிராம்பபுற பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால், அது மொத்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.
(IANS தகவல்களுடன் எழுதப்பட்டது)