முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக வாய்ப்பு
New Delhi: இரண்டுநாள் பயணமாக இந்தியா வருகை வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா அவரது கணவர் ஜாரட் குஷர் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். முதலில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பிரதமர் மோடி சுற்றிக் காட்டி விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மோடியைப் புகழ்ந்து பேசினார். பின்னர் மாலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட்டனர். தாஜ்மகாலை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்த டிரம்ப் தம்பதியினர், பல இடங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மறுபுறம் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மகாலின் அழகை ரசித்தவாறே புகைப்படமும், செல்பி படங்களும் எடுத்துக்கொண்டனர்.
2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். இவரை , ஜனாதிபதி , பிரதமர் மோடி வரவேற்றனர். தொடர்ந்து அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
முப்படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளைப் பிரதமர் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, இன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்றைய தினம் பேசிய டிரம்ப், இந்தியாவுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி அமெரிக்கா வருவதாகவும் கூறினார். 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையே, சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம், இன்று இறுதிசெய்யப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.