காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் சட்டசபையை நேற்று கலைத்தார்.
Srinagar: ஜம்மு காஷ்மீரில் சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது. இதற்கு முன்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆட்சியமைக்க உரிமை கோரி ஃபேக்ஸை கவர்னர் மாளிகைக்கு அனுப்பினார். இந்த ஃபேக்ஸ் கவர்னர் கைக்கு சேரவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரத்தை கிண்டலடித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “ கவர்னர் அலுவலகத்திற்கு நல்ல ஃபேக்ஸ் மெஷின் தேவைப்படுகிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் என்.டி.டி.வி.-க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்,“ நேற்று மிலாடி நபி பண்டிகை. அதனால் பெரும்பாலானவர்கள் விடுமுறையில் இருந்தனர். எனக்கு உணவு கொடுப்பதற்கே ஆளில்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் ஃபேக்ஸை யார் பார்ப்பது” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
என்.டி.டீ.வி.-க்கு அளித்த பேட்டியில், “ காஷ்மீர் சட்டசபையை கலைத்தது சரியான நடவடிக்கைதான். அதில் எந்த தவறும் கிடையாது. என் கைக்கு ஃபேக்ஸ் முன்னரே வந்தாலும் கூட சட்டசபையை கலைத்துதான் நடவடிக்கை எடுத்திருப்பேன்.
காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக குதிரைபேரம் நடந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தேன். முன்பே என்னால் சட்டசபையை கலைத்திருக்க முடியும். ஆனால் அப்போது எனக்கு போதிய காரணங்கள் கிடைக்கவில்லை. இப்போது ஆட்சியமைக்க உரிமை கோரப்படுவதால் சட்டசபையை கலைத்திருக்கிறேன்.” என்றார்.