"ஷாகீன் பாக்-ஐ இல்லாமல் செய்வது என்பது, அகிம்சையையும் சத்யாகிரகத்தையும் அழிப்பது போன்றது"
New Delhi: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ட்விட்டரில் பொங்கியுள்ளார்.
இதற்கு காரணம், முன்னதாக அமித்ஷா, டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, “டெல்லி சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் இந்நகரத்தையும் நாட்டையும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள. ஷாகீன் பாக்கில் நடந்த சம்பவங்கள் போல நடக்காமல் இருக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
பிப்ரவரி 8 ஆம் தேதி, ஈவிஎம் இயந்திரத்தில் நீங்கள் அழுத்தும் பட்டன்களின் மின்சார ஷாக், ஷாகீன் பாக்கில் எதிரொலிக்க வேண்டும்,” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில்தான், சிஏஏ - என்ஆர்சிக்கு எதிராக தொடர்ந்து வீரியமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதைக் குறிவைத்துதான் அமித்ஷா, இப்படியொரு கருத்தைத் தெரிவித்துள்ளார் எனப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம், “ஷாகீன் பாக் இருக்கக் கூடாது என்று சொல்லி மத்திய உள்துறை அமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். காந்திஜியை மதிக்காதவர்கள்தான் ஷாகீன் பாக்-ஐ இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஷாகீன் பாக் என்பது மகாத்மா காந்தியை பிரதிபலிக்கிறது.
ஷாகீன் பாக்-ஐ இல்லாமல் செய்வது என்பது, அகிம்சையையும் சத்யாகிரகத்தையும் அழிப்பது போன்றது,” என்று ட்விட்டரில் பொங்கியுள்ளார்.