ஞாயிறன்று மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ள மக்கள் ஊரடங்குகளை இந்தியர்கள் அனைவரும் நாளை மறுதினம் கடைப் பிடிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த மக்கள் ஊரடங்கு நடவடிக்கை, கொரோனா வைரஸ் பரவுதல் சங்கிலியை உடைத்தெறியும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் விதம் குறித்து, சுகாதாரத்துறைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கொரோனாவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி விட்டதாகக் கூறினார்.
நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஞாயிறன்று இந்தியக் குடிமக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மக்கள் ஊரடங்குகளை மக்கள் சுயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த ஊரடங்கை மக்கள் தங்களது சொந்த வீடுகளிலோ அல்லது உறவினர்கள் இல்லத்திலோ கடைப்பிடிக்கலாம் என்றும் மோடி கூறினார்.
மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது கொரோனா பரவுதலுக்கான முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் இதுவரைக்கும் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.