மன்மோகன் சிங் செப்.1932ஆம் ஆண்டு, பிரிவினைக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்துள்ளார்.
New Delhi: முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மன்மோகன் சிங் இன்று 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர், மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், தலைமை பொருளாதார ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அதில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் செப்.1932ஆம் ஆண்டு, பிரிவினைக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டில் படித்தார்.
1971 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் வணிக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் அவர் பிரதமராக வருவதற்கு முன்னர் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தார், அவர் ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியேற்ற பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
2004-ல், காங்கிரஸின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சோனியா காந்தி உயர் பதவியை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து அவர் பிரதமரானார். அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில், காங்கிரஸ் அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுகளையும் பொருளாதார மந்தநிலையையும் எதிர்த்துப் போராடியது.