Chennai: சென்னை: திபெத்திலுள்ள கைலாஷ் மான்சரோவருக்கு யாத்திரை சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், உடல் நல பாதிப்பால் இறந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
வானிலை மாற்றத்தின் காரணமாக 1500-க்கும் மேற்பட்ட இந்திய யாத்திரிகர்கள், நேபாளத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைலாஷ் மான்சரோவர் புனித யாத்திரைக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான இந்தியார்கள் செல்கின்றனர். கடுமையான காலநிலையில் மலையேற வேண்டும் என்பதால், யாத்திரிகர்கள் மலை இடுக்கில் சிக்கி தவிக்கும் அபாயம் ஏற்படுகின்றன.
69 வயதான ராமசந்திரன் என்பவர், உடல் நல குறைவால் மூச்சு திணறல் ஏற்பட்டு, யாத்திரையை நிறைவு செய்யும் முன்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் நேபாளில் உள்ள காத்மண்டுவில் வைக்கப்படுள்ளது. தற்போது அவரின் குடும்பத்தினர் நேபாளம் விரைந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அதிகாரிகள், காத்மண்டு இந்திய தூதரகத்துடன் இணைந்து இறந்தவரின் உடலை சென்னை கொண்டு வரவேண்டிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த 18 பேர் மீட்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது லக்னோ நகரத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, மேலும் ஒருவர் லக்னோ வர இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்கள் இன்று இரவு சென்னை வந்தடைவார்கள் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேரும் யாத்திரைக்கு சென்றுள்ளதாக கூறினார்.
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு சார்பில் புதுடில்லியில் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில், உதவிக்காக ஐந்து அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 011-21610285; 011-21610286 என்ற எண்களில் அவர்களை உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.