This Article is From Oct 31, 2019

ப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவர்களின் முடிவை நாளை பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த திங்களன்று சிதம்பரம் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

New Delhi:

ப.சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிப்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும், மருத்துவர்களின் முடிவை நாளை பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கின் நேற்றைய விசாரணையின் போது நவ.13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

திகார் சிறையில் சிதம்பரத்திற்கு தனி அறை, வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டில் சமைத்த உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று சிதம்பரம் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து, ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற சிதம்பரம் தாக்கல் செய்த மனு நவம்பர் 4-ம்தேதி விசாரிக்கப்பட உள்ளது. 

சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டு வருகிறார். இதுநாள் வரையில் சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டை எந்தவொரு விசாரணை அமைப்பும் நிரூபிக்கவில்லை என்று சிபல் வாதிட்டார். 

இந்நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற ப.சிதம்பரம் 3 நாள் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், உடல்நலப் பிரச்சனைகளுக்கு டெல்லி மருத்துவமனையிலேயே ப.சிதம்பரம் சிகிச்சை பெறலாம் என்று கருத்து கூறிய நிலையில், ப.சிதம்பரம் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இதேபோல், ப.சிதம்பரத்தின் குடும்ப மருத்துவர் டெல்லிக்கு வந்து மருத்துவ ஆலோசனை வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், ப.சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிப்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும்,  மருத்துவர்களின் முடிவை நாளை பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

.