This Article is From Apr 28, 2019

மோடியின் ‘காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது’ கருத்துக்கு, ராகுலின் பதிலடி!

"அரசுத் துறைகளில் சுமார் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருக்கின்றன. அதை மோடி நிரப்ப மாட்டார்"

மோடியின் ‘காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது’ கருத்துக்கு, ராகுலின் பதிலடி!

அனில் அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோர் எங்கு உள்ளனர். சிறையிலா, வெளியிலா- ராகுல் கேள்வி

Raebareli/Amethi, Uttar Pradesh:

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படி அவர் பரப்புரையில் ஈடுபட்டு வரும்போது, ‘கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது' என்று கேள்வியெழுப்பி வந்தார். அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் இது குறித்துப் பேசுகையில், ‘கப்பர் சிங் வரியை (ஜி.எஸ்.டி வரி) போல ஒரு முட்டாள்தனத்தை யாரும் கடந்த 70 ஆண்டுகளில் புரியவில்லை' என்றுள்ளார். 

அவர் உத்தர பிரதேச ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும்போது பேசுகையில், ‘சவுகிதார், ரேபரேலி மற்றும் அமேதியிலிருந்து வேலைவாய்ப்புகளை திருடிவிட்டார். அனில் அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோர் எங்கு உள்ளனர். சிறையிலா, வெளியிலா.

அரசுத் துறைகளில் சுமார் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருக்கின்றன. அதை மோடி நிரப்ப மாட்டார். அவரது நண்பர்களுக்கு உதவி செய்வதிலேயே நேரம் சரியாக இருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஆண்டில் இந்த காலி பணியிடங்களை நிரப்புவோம். பஞ்சாயத்துகளில் இருக்கும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளையும் நிரப்புவோம். வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு நியாய் திட்டம் மூலம் குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பது சாத்தியம்தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, அதைச் செய்துகாட்டும்' என்று பேசினார். 

பணமதிப்பிழப்பு குறித்து ராகுல் பேசுகையில், ‘மோடி பணமதிப்பிழப்பு என்ற பெயரில் உங்கள் பையிலிருந்து தொகையை எடுத்துக் கொண்டார். உங்களை ஏமாற்றி, பொய் சொல்லி, வரிசையில் நிற்க வைத்தார். ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்துக்கு எதிரான போர் என்று அதை பிரகடனப்படுத்தினார். அவர் மொத்த நாட்டையும் ஏமாற்றி, உங்கள் பையிலிருந்து பணத்தை எடுத்து, அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டார்' என்று கூறினார். 

அவர் காங்கிரஸின் நாடாளுமன்ற வாக்குறுதிகள் குறித்து பேசும்போது, ‘நாங்கள் எதைச் செய்தாலும் அதை தீவிரமாக அலசி ஆராய்ந்த பின்னர்தான் செய்ய ஆரம்பிப்போம். ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் பணம் கொடுப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு 3,60,000 ரூபாய் கொடுப்பது என்பது சாத்தியமே. அதைத்தான் நாங்கள் நியாய் திட்டம் மூலம் நாட்டு மக்களுக்கு செய்யப் போகின்றோம். 

2019-ல் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர், விவசாயி ஒருவர் கடன் வாங்கி அதைத் திருப்பி கொடுக்க முடியவில்லை என்றால், அவர் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார். விவசாயிகளின் துயர் நீக்க நாங்கள் தனியாக விவசாய பட்ஜெட்டை கொண்டு வருவோம்' என விரிவாகப் பேசினார்.

.