This Article is From Sep 04, 2018

‘அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டும்!’- சோஃபியா விவகாரத்தில் கமல் காட்டம்

‘பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே

‘அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டும்!’- சோஃபியா விவகாரத்தில் கமல் காட்டம்

பாஜக-வுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் கோஷம் எழுப்பிய மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோஃபியா என்ற அந்தப் பெண்ணுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.

லூயிஸ் சோஃபியா என்கின்ற 28 வயது ஆராய்ச்சி மாணவியும் தமிழிசையும் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் விமானத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது சோஃபியா, ‘மோடி- ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஒழிக’ என்று கோஷம் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் தூத்துக்குடியில் தரையிறங்கியவுடன் சோஃபியா கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானம் தரையிறங்கிய பின்னர் தமிழிசை பேசும் ஒரு வீடியோ பதிவாகியுள்ளது. அதில் அவர், ‘இது ஒன்றும் பொது இடம் அல்ல. அவர் எப்படி கோஷம் எழுப்பலாம்? அவருக்கு சில அடிப்படைவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம். அவர் சாதாரண பயணி போல தெரியவில்லை. நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன்’ என்று கோபமாக பேசுகிறார்.

இதையடுத்து போலீஸ் சோஃபியாவை கைது செய்தது. அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல சோஃபியாவின் தந்தை சாமி, தமிழிசைக்கு எதிராக ஒரு புகார் அளித்துள்ளார். ஆனால், அது வழக்காக பதிவு செய்யப்படவில்லை.

சோஃபியா, இதற்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராகவும் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் சோஃபியா, ‘நான் தமிழிசை சௌந்தரராஜனுடன் விமானத்தில் சென்று கொண்டிருக்கிறேன். இப்போது, ‘மோடி - ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஒழிக’ என்ற கத்தினால் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்படுவேனா?’ என்று பதிவிட்டார்.

இந்நிலையில் விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த விவகாரம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

.