போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்
ஹைலைட்ஸ்
- துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்
- பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது
- ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது
Chennai: தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம், `எதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி கொடுத்தது' என்று அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டம், அதன் 100-வது நாளில் தீவிரமடைந்தது. 100-வது நாளன்று அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று கருதி தூத்துக்குடி ஆட்சியர், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தும் மக்கள் அறவழியில் போராடுவோம் என்று கூறினர். 100-வது நாளன்று ஊர்வலமாகச் சென்று கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராடும் மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ். இதனால், மொத்தம் 13 பேர் பலியாகினர்.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், `ஆரம்பத்தில், போராடிய மக்களை கலைந்து சென்றுவிடுமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால், வேறு வழியில்லாமல் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தினர். மக்கள் அதிகாரம், நாம் தமிழர் கட்சி போன்ற சில அமைப்புகள் ஊடுருவி வன்முறையை கையில் எடுத்தனர்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை அனைத்தையும் பெரும்பான்மையான மக்கள் மறுக்கின்றனர். ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கையோ, ரப்பர் குண்டுகளோ பயன்படுத்தப்படவில்லை. போலீஸ் நேரடியாக துப்பாக்கி சூட்டில் இறங்கியது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, `மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த எது காரணமாக இருந்தது. யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது. இது குறித்து இன்னும் 5 நாட்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். முக்கியமாக, தூத்துக்குடியில் போராட்டத்துக்கு பின்னர் காணாமல் போனவர்களின் குடும்பங்களை விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்யக் கூடாது' என்று கறாரன உத்தரவை பிறபித்துள்ளது நீதிமன்றம்.