பாதிக்கப்பட்ட 24 பேரில் 6பேர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள்.
மத்திய பிரதேசத்தில் பசுக்களை கடத்தியதாகக் கூறி 24 பேரை கும்பல் ஒன்று சங்கிலியால் பிணைத்து சாலையில் அமரவைத்து ‘கோமாதவுக்கு ஜே' என கோஷமிடச் செய்துள்ளனர். மத்திய பிரதேச காண்ட்வா மாவட்டத்தில் சாவலிகேடா என்ற கிராமத்தின் இச்சம்பவம் நடந்துள்ளது. பிடிஐ செய்தியின் படி, மத்திய பிரதேசத்திலிருந்து மகாராஷ்டிராவில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு ஒரு வேனில் பசுமாடுகளை ஏற்றிச் சென்றுள்ளனர். வாகனம் சாவலிகேடா எனும் கிராமத்திற்குள் வந்தபோது 100க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளது.
வேனில் 20 மாடுகள் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான முறையான ஆவணங்கள் கொடுக்க இயலாததால் வாகனத்திலிருந்தவர்களை இறக்கி அவர்களை சங்கிலியால் கட்டியுள்ளனர். அனைவரையும் சாலையில் முழங்காலிட வைத்து கோமாதாவுக்கு ஜே என கோஷமிடச் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கால்வா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக இரண்டு ஆண்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். அவர்களுடன் வந்த பெண்ணையும் ஜெய் ஶ்ரீ ராம் முழக்கத்துடன் ஒரு கும்பல் அடித்து துன்புறுத்தியது. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை எஸ்.பி ஷிவ்தயாள் சிங், “வேனில் வந்தவர் அதில் உள்ள மாடுகள் எங்களுடையது எனக் கூறுகின்றனர். ஆனால், அவர்களிடம் ஆவணம் எதுவுமில்லை. அதனால் அவர்களை மத்திய பிரதேச கோவன்ஷ் வத் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். அவர்களை சங்கிலியால் கட்டி துன்புறுத்தியதாக கூறப்படுவது தொடர்பாக இதுவரை யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்ட 24 பேரில் 6பேர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பசு பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது நிறைவேறினால் இந்த சட்டத்தின் படி பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 6 முதல் 5 வருடங்கள் வரை தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்படும்.