This Article is From Aug 17, 2018

பனிக்குடம் உடைந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டரில் மீட்பு: திக் திக் நொடிகள்

சிக்கியிருந்தது கர்ப்பிணிப் பெண் என்பதால் முதலில் ஒரு மருத்துவரைக் கீழே இறக்கி அப்பெண்ணின் நிலையைக் கண்டறிந்தனர்

New Delhi:

கேரள மாநிலம் முழுதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டுமாடியில் சிக்கி இரு உயிர்களாகப் போராடிக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இறுதியாக கடற்படையினர் ஹெலிகாப்டரில் மீட்டனர். இந்த திக் திக் நொடிகளை வீடியோவாக கடற்படைச் செய்தித்தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிக்கியிருந்தது கர்ப்பிணிப் பெண் என்பதால் முதலில் ஒரு மருத்துவரைக் கீழே இறக்கி அப்பெண்ணின் நிலையைக் கண்டறிந்தனர். பின்னர் அவர் மேலே ஹெலிகாப்டருக்குள் இழுத்துக் காப்பாற்றப்பட்டார். மீட்கப்படுகையில் அவரது பனிக்குடம் உடைந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆலப்புழாவிலுள்ள சஞ்சீவனி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரிலேயே கொண்டு சேர்க்கப்பட்டார்.

கேராளாவில் முழுவீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எர்ணாகுளம், பத்தணம்திட்டா மாவட்டங்களில் இருந்து வியாழன் அன்று 3000 பேரை இதுவரை மீட்டுள்ளனர். ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பத்தணம்திட்டா மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல படகுகள், ஹெலிகாப்டர்கள் சாலக்குடி, செங்கனூர், பத்தணம்திட்டா பகுதிகள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் பேய்மழைக்கு இதுவரை 167 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலிருந்து சேதங்களைப் பார்வையிட இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கேரளம் வருகிறார்.

அண்மையில் கிடைத்த தகவலின்படி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணுக்கு பிற்பகல் 2:10 மணிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

1924க்குப் பிறகு மிக மோசமான மழை, வெள்ளத்தை கேரளா சந்தித்து வருகிறது. 80000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்கள், சொத்துக்களின் மதிப்பு 8000 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

.