This Article is From Jul 30, 2018

ராஜஸ்தானில் டிராக்டர் ரேஸ் பார்க்கச் சென்ற இடத்தில் நடந்த துயரம்!

டிராக்டர் ரேஸ் நடந்த இடத்தில், தகர ஷீட் கொண்டு போடப்பட்டிருந்த கூரையின் மீது நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி பந்தயத்தை கண்டுகளித்துள்ளனர்

Jaipur, Rajasthan:

ராஜஸ்தான் மாநிலத்தில் டிராக்டர் ரேஸ் நடந்த இடத்தில், தகர ஷீட் கொண்டு போடப்பட்டிருந்த கூரையின் மீது நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி பந்தயத்தை கண்டுகளித்துள்ளனர். திடீரென்று கூரை இடிந்து விழுந்ததில் 17 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் இந்த டிராக்டர் பந்தயம் நடந்துள்ளது. பத்மபூரில் இந்த ரேஸ் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முறையும் பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில், பந்தயத்தை சரியாக பார்த்து ரசிக்க தகர ஷீட் போட்ட கூரையின் மீது மக்கள் ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கூரை உடைந்து விழுந்துள்ளது. கூரை மீது நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்களும் இதனால் விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விழுந்தவர்களை அப்புறப்படுத்தத் தொடங்கினர். 

இந்த சம்பவத்தில் 7 பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கங்கா நகர் எஸ்.பி யோகேஷ் யாதவ், ‘இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 17 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 7 பேருக்கு பலத்தக் காயம் ஏற்ப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு முறைப்படி அனுமதி பெறப்பட்டவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், எப்படி இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரியதாக நடத்த அனுமதிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

.