இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மும்பை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
ஹைலைட்ஸ்
- நேற்று மாலை இந்த விபத்து நடந்துள்ளது
- பேரிடர் மீட்புப் படையின் 3 குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது
- விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் இல்லை
Raigad, Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தின் ரைகாட் மாவட்டத்தில், மக்கள் வசித்து வந்த கட்டடம் இடிந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் இறந்துள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. மேலும் சுமார் 25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 60 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேற்று மாலை இந்த விபத்து நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. இடிந்து விழுந்துள்ளது, 5 மாடி கட்டடம் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்றும் தெரிகிறது. அதில் 45 ஃபிளாட்டுகள் இருந்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விபத்து மிகவும் கோரமானது என்று கூறியுள்ளார். அவர் மேலும், பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரலுடன் பேசியுள்ளதாகவும், வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் இரண்டு அமைச்சர்களான ஆதித்யா தாக்கரே மற்றும் எக்நாத் ஷிண்டே ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்த்துள்ளனர்.
மீட்புப் பணி முடிந்த பின்னர், சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மும்பை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
கடந்த மாதம் மும்பையில் கனமழை பெய்தது. இதனால் அங்கு அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். பலருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.