கப்பலில் மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.
Tokyo: கொரோனா வைரஸால் கதி கலங்கி நிற்கும் ஜப்பான் சொகுசு கப்பலில் மொத்தம் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தி டயமண்ட் பிரின்சஸ் என்ற ஜப்பான் சொகுசு கப்பல் டோக்கியோ அருகே யோகோஹாமா துறைமுகத்தில் கடந்த 3-ம்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3,711 பேர் உள்ளனர்.
கப்பலில் 132 ஊழியர்கள், 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், 'டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் இருப்பவர்களுக்குச் சோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 79 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர் இந்தியர். இதன்படி மொத்தம் 8 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியர்கள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்தியத் தூதரகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கப்பலில் உள்ள இந்தியர்களைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கட்டாய மருத்துவச் சிகிச்சைக்கு (Quarantine Period) பின்னர் இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஜப்பான் அரசுடன் ஆலோசித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.