"அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
ஹைலைட்ஸ்
- இன்று அதிகாலை இயற்கை எய்தினார் க.அன்பழகன்
- இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது
- பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
கடந்த 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை காலமானார், அவருக்கு வயது 97. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் குன்றி காணப்பட்ட அவர் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
பேராசிரியர் க.அன்பழகன் 1977ம் ஆண்டு முதல் ஒன்பது முறை திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். அவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ., பதவியிலும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் திகழ்ந்தவர். க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமாவார்.
அவரது மறைவைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ், “திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் செய்தியைக் கூறியுள்ளார்.