This Article is From Jan 15, 2019

சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தப் பெண்ணுக்குத் தொடரும் கொடுமை; மருத்துவமனையில் அனுமதியா!?

38 வயதாகும் கனகதுர்கா, 40 வயதாகும் தனது தோழி பிந்து அம்மினியுடன், ஜனவரி 2 ஆம் தேதி, சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார்

சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தப் பெண்ணுக்குத் தொடரும் கொடுமை; மருத்துவமனையில் அனுமதியா!?

இரு பெண்களும், கோயிலுக்குள் சென்ற பிறகு கேரளாவில் மாநிலம் தழுவிய அளவில் பல வலதுசாரி அமைப்புகள் போராட்டம் செய்தன

ஹைலைட்ஸ்

  • ஜனவரி 2ம் தேதி கனகதுர்கா ஐயப்ப தரிசனம் செய்தார்
  • கடந்த இரு வாரங்களாக அவர் தலைமறைவாக இருந்தார்
  • இன்றுதான் கனகதுர்கா வீட்டுக்குச் சென்றுள்ளார்
Thiruvananthapuram:

உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, ‘சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம்' என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்தப் பிறகு, இரண்டு இள வயதுப் பெண்கள் முதன்முறையாக கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதில் ஒரு பெண்ணின் மாமியார், அவரை அடித்துவிட்டார் எனவும் அதனால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் நமக்குத் தகவல் வந்துள்ளது. 

கனகதுர்கா என்ற அந்தப் பெண், கோயிலுக்குள் சென்று வந்த பின்னர், வலதுசாரி அமைப்பினர் அவருக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். அதையடுத்து அவர் கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இன்று காலைதான், கனகதுர்கா தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டுக்கு வந்த கனகதுர்காவை, அவரது மாமியார் தலையில் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது கனகதுர்கா, நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

38 வயதாகும் கனகதுர்கா, 40 வயதாகும் தனது தோழி பிந்து அம்மினியுடன், ஜனவரி 2 ஆம் தேதி, சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார். இதையடுத்து இருவரும் கோச்சிக்கு வெளியே தலைமறைவாக இருந்து வந்தனர். கனகதுர்கா, கேரள அரசில் வேலை பார்த்து வருகிறார். பிந்து அம்மினி, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். 

சபரிமலை தரிசனம் குறித்து NDTV-யிடம் கனகதுர்கா முன்னர் பேசுகையில், “சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்வதன் மூலம் எனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் வரும் என்று நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் நான் அதைச் செய்ய விரும்பினேன். சபரிமலை விவகாரத்தில் நாங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்படுகிறோம். கோயில் என்பது பக்திக்கான இடம் மட்டுமல்ல, அது பாலின சமத்துவத்துக்குமான இடமும் கூட” என்று பெருமிதத்துடன் பேசினார். 

இரு பெண்களும், கோயிலுக்குள் சென்ற பிறகு கேரளாவில் மாநிலம் தழுவிய அளவில் பல வலதுசாரி அமைப்புகள் போராட்டம் செய்தன. இந்தப் போராட்டங்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

.