வெங்காயம் சரியாக விளையாததால் ஏறக்குறைய 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.
Bengaluru: உற்பத்தி குறைந்தது மற்றும் அதிகமான தேவை காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 200-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெங்காயத்தின் விலை ரூ. 200- யை எட்டியிருக்கிறது.
இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் வேளாண்மை சந்தை அதிகாரி சித்தகங்கையா கூறுகையில், ‘பெங்களூருவில் உள்ள சில்லரை வர்த்தக கடைகளில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்று ரூ. 200 வரையில் விற்பனை செய்கிறது. மொத்த விலைக்கடைகளில் குவிண்டால் ஒன்று ரூ. 5,500 முதல் 14,000 வரையில் விற்பனையாகிறது' என்று தெரிவித்தார்.
வரலாறு காணாத விலை உயர்வு காரணமாக, அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த வெங்காயம், வீடு மற்றும் ஓட்டல் உணவுகளில் மாயமாகி வருவதை பார்க்க முடிகிறது.
இந்தியாவில் வெங்காயத்தின் தேவை ஆண்டு ஒன்றுக்கு 150 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. இதில் கர்நாடகத்தில் மட்டும் ஆண்டுக்கு 20.19 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பயிர் விளைச்சல் பாதிப்பு காரணமாகவும், அறுவடைக்கு பிந்தைய இழப்பு காரணமாகவும் வெங்காயத்தின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.
வெங்காயத்தை அறுவடை செய்யும் போது கனமழை பெய்ததால், நல்ல தரமான வெங்காயங்கள் பல இடங்களில் அழுகி விட்டன.
தேவை அதிகம், உற்பத்தி குறைவால் வரலாறு காணாத விலை உயர்வை வெங்காயம் சந்தித்துள்ளது.
நவம்பர் மாதத்தின்போது கர்நாடகாவில் 60 முதல் 70 குவிண்டால் வெங்காயம் நாள் ஒன்றுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த அளவு டிசம்பர் மாதத்தில் பாதியாக குறைந்து விட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
வெங்காயத்தின் இருப்பை அதிகப்படுத்துவதற்காக விடுமுறை நாட்களிலும் வெங்காய வர்த்தகம் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் வெங்காயத்தின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், அவற்றை இருப்பு வைப்பதற்கு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு போதிய வசதி இல்லை என்று வேளாண்மை சந்தை அதிகாரி சித்தகங்கையா கூறியுள்ளார்.
இதற்கிடையே வெங்காய பதுக்கலை தடுப்பதற்காக உணவுப் பாதுகாப்பு கழக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)