சென்னையில் கிலோ வெங்காயம் ரூ.150 வரை விற்பனையாகி வருகிறது.
New Delhi: தொடர் விலை உயர்வு காரணமாக வெங்காயத்தை இருப்பு வைக்க மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுபாடு விதித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அளவை மேலும், 50 சதவீதமாக குறைத்துள்ளது.
கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் இந்த மாநிலங்களில் பெய்த கனமழையால் வழக்கமான விளைச்சலில் 70 விழுக்காடு குறைந்துவிட்டது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணத்தினால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இதன் காரணமாக வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அதன்படி, மொத்த விற்பனையாளர்கள் 50 டன்னும், சில்லரை விற்பனையாளர்கள் 10 டன்னும் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து வெங்காயத்தின் விலை கட்டுபாட்டுக்குள் வராததால், பதுக்கலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் 25 டன்னும், சில்லரை விற்பனையாளர்கள் 5 டன் அளவுக்கு மட்டுமே வெங்காயத்தை இருப்புவைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனிடையே, நேற்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வெங்காய மாலை அணிந்து வந்த ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். பாஜக மிகப்பெரிய வெங்காய ஊழலில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. எனினும், சில்லரை விற்பனை நிலையங்களில் கிலோ வெங்காயம் ரூ.200 வரைக்கூட விற்பனை செய்யப்பட்டு வருகிறது.