பள்ளிகளில் இணைய வழிக்கல்விக்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. அனைத்து மாணவர்களாலும் ஆன்லைன், செல்போன், இணையதள வசதி பெற முடிவதில்லை.
மேலும், ஆன்லைன் வகுப்புகள் பலருக்கும் புரியாமல் இருந்து வந்தது. குறிப்பாக தேனியைச் சேர்ந்த விக்கிரபாண்டி என்ற மாணவர் ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதலில் கூடுதலாக சில அறிவுறுத்தல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி என்பது கட்டாயம் அல்ல, மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மனநிலையைக் கொண்டு வர வேண்டும், ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் தங்களது சக மாணவர்களை பார்க்க முடியாது, செல்போன், இணைய பிரச்சனை போன்ற குறைபாடுகளால் அனைவராலும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாது. எனவே, மாணவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலை போக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையிலான நட்புறவை பேணும் வகையில் ஆலோசகர் போன்று ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்க வேண்டும். அந்த ஆலோசகரின் செல்போன் எண், பெயர், அவர் வகிக்கும் பதவி அனைத்தும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்ப்பட்டுதள்ளதாக கூறப்படுகிறது.