This Article is From Sep 13, 2019

Chandrayaan 2: இன்னும் ஒரு வாரம்தான் பாக்கியுள்ளது- லேண்டரை தொடர்புகொள்ளுமா இஸ்ரோ?

Vikram Lander, Chandrayaan 2: சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

Chandrayaan 2: இன்னும் ஒரு வாரம்தான் பாக்கியுள்ளது- லேண்டரை தொடர்புகொள்ளுமா இஸ்ரோ?

நிலவின் மேற்பரப்பில் இருக்கும் ரோவருக்கான வாழ்க்கை காலமானது ஒரு நிலவு நாள்

Bengaluru:

சந்திராயன் 2 லேண்டருடன் இழந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு இன்னும் ஒரு வாரம்தான் கால அவகாசம் உள்ளது. 

சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவிவட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.

எனினும், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். 

இதனிடையே, தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறிந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. தொடர்ந்து, விடுபட்ட தகவல் தொடர்பை மீட்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தது.

நிலவின் மேற்பரப்பில் இருக்கும் ரோவருக்கான வாழ்க்கை காலமானது ஒரு நிலவு நாள். இது கிட்டத்தட்ட 14 பூமியின் நாட்களுக்குச் சமமாகும். விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விழுந்து ஒரு வார காலம் முடிந்துள்ளது. எனவே, இஸ்ரோவுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பாக்கியிருப்பது இன்னும் ஒருவார காலம்தான். 

“லேண்டர் மற்றும் ரோவரில் இருக்கும் பேட்டரியானது மணிக்கு மணி காலியாகிக் கொண்டே வரும். ஒவ்வொரு மணி நேரமும் கடக்க கடக்க, தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதென்பது இன்னும் கடினமானதாக மாறும். லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த வாய்ப்புகள் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது.” என்று இஸ்ரோ-வைச் சேர்ந்த அதிகாரி நம்மிடம் தகவலைப் பகிர்ந்தார். 

“நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ஹார்டாக லேண்ட் ஆனதுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். அப்படி லேண்ட் ஆன காரணத்தினால் லேண்டர் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று இன்னொரு இஸ்ரோ விஞ்ஞானி கூறுகிறார். 


 

.