கட்சி பணிகளாலும், கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட செல்வதாலும் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.
கலைஞர் சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 16-ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதில், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் அருகருகே அமைய உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை திறந்து வைக்க அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், திமுகவின் அழைப்பை ஏற்று இந்த சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்வில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், கட்சி பணிகள் காரணமாகவும், கஜா புயல் பாதிப்படைந்த, பார்க்க முடியாமல் போன பல கிராமங்கள் பாக்கி இருக்கிறது.
நான் சிலை திறப்பிற்கு வருவதாக சொல்லவில்லை, எனெனில் இதெல்லாம் ஏற்கனவே வருவதாக ஒப்புக்கொண்ட நிகழ்வுகள், இதைத்தவீர கலைஞர் மேல் எனக்கு உள்ள மரியாதையை மீண்டும் ஆதாரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது ஒரு நல்ல விழா, இனியும் நல்ல விழாக்கள் வரும் என்று அவர் கூறியுள்ளார்.