New Delhi: கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 250க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதற்கு ஆளும் இடதுசாரி அரசு அணைகளை ஒழுங்காக நிர்வகிக்காததே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சித்துள்ளார். “கேரளாவில் ஏற்பட்டது இயற்கைப் பேரிடர் கிடையாது, இது அரசாங்கத்தின் மெத்தனப்போக்காளும் தவறான முடிவுகளாலும் ஏற்பட்ட பேரழிவு. இது தொடர்பாக அரசு எடுத்த முடிவுகளுக்கு நீதிவிசாரணை வேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.
“கேரள மாநிலத்திலுள்ள அணைகளில் உள்ள நீரை சில மாதங்களுக்கு முன்பே திறந்துவிட்டிருந்தால் இவ்வெள்ளம் தவிர்க்கப்பட்டிருக்கும். அரசின் பேராசையே இத்தகைய பேரழிவுக்குக் காரணம். இதன் பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என்று ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளனர்.
“எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் தவறு எதுவும் நடக்கவில்லை. நீர் முன்பே திறந்துவிடப்படாததற்குப் பேராசை காரணம் இல்லை. பேரிடர் மேலாண்மை அலுவலர்களின் ஆலோசனைகளின்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன” என்று இப்புகார் குறித்து கேரள அணைகளை நிர்வகித்து வரும் மின்வாரியத்தினர் கூறுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, இடுக்கி அணை நிரம்பி நீர் திறந்துவிடப்பட்ட சமயத்தில்தான் வெள்ளம் ஏற்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து கேரளத்தின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. பத்து இலட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. வீடுகள் போக, சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துகளும் சேதமடைந்துள்ளதால் மாநிலத்தின் உட்கட்டமைப்பு உருக்குலைந்தது. பயிர்களும் நீரில் மூழ்கி நாசமடைந்தன.
வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தின் முழு மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. இப்பாதிப்புகளில் இருந்து மாநிலத்தை முழுவதுமாக மீள்கட்டமைக்க இரண்டு ஆண்டுகளாவது ஆகும் என மாநில அரசு கூறியுள்ளது.