நுழைவுத் தேர்வுகள் பிரச்னையைத் தவிர, சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஹைலைட்ஸ்
- இன்று மதியம் இச்சந்திப்பு நடக்கவுள்ளது
- காணொலி மூலம் சந்திப்பு நடைபெறும்
- எதிர்க்கட்சி முதல்வர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்
New Delhi: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இன்று மதியம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த சந்திப்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிகிறது. சோனியாவும் மம்தாவும் ஒன்றிணைந்து, நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பில், ஜேஇஇ, நீட் தேர்வுகளை தள்ளிவைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதே நேரத்தில் மத்திய அரசு தரப்பு, அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனக் கூறியுள்ளது.
நுழைவுத் தேர்வுகள் பிரச்னையைத் தவிர, சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் காலக்கட்டத்தில் இப்படி ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை மத்திய அரசு, சரிகட்ட வேண்டும் என்பதும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தப்படும்.
ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று இந்த சந்திப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி கவுன்சிலில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அங்கம் வகிப்பார்கள். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தரப்பில், 14 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு தரச் சொல்லி வலியுறுத்தப்படுமாம்.
இந்த சந்திப்பு இவ்விரு விஷயங்களை மட்டும் குறிவைக்காமல், மொத்தமாக எதிர்க்கட்சிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக திரட்டுவதற்கான முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி, தற்போது நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய்யுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என்று சொல்லப்படும் இந்த சந்திப்பில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவ சேனா கூட்டணி அரசை வழிநடத்தி வரும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கலந்து கொள்வது சந்தேகமே என்று சொல்லப்படுகிறது. அதேபோல கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், சந்திப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் பங்கேற்பது கடினம் எனத் தகவல்.
செவ்வாய் கிழமையான நேற்று சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனைவரும் காணொலி சந்திப்பில் பங்கேற்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் 23 மூத்த நிர்வாகிகள், கட்சித் தலைமையில் நிலவும் ஸ்திரமற்றத் தன்மையை கேள்வியெழுப்பி கடிதம் எழுதியிருந்தனர். இது குறித்து நேற்று முன்தினம் காங்கிரஸ் காரிய கமிட்டி சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பின் முடிவில், சோனியா காந்தியே தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியில் ‘எதிர்ப்பு' தெரிவித்தவர்களுக்கு பாடம் புகட்டும் நோக்கிலும் இன்றைய சந்திப்பை ஒருங்கிணைத்துள்ளாராம் சோனியா காந்தி.