காங்கிரஸ் மூத்த நிர்வாகி அபிஷேக் மனு சிங்வி, ‘வாக்கு இயந்திரத்தில், பிஜேபி என்கிற எழுத்து தெளிவாக தெரிகிறது. எந்தக் கட்சியும் சின்னம் மற்றும் பெயரை ஒரே இடத்தில் பயன்படுத்தக் கூடாது’ என்றார்.
New Delhi: நாட்டின் பிரதான எதிர்கட்சிகள் புது டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒரு பரபரப்புப் புகாரை தெரிவித்துள்ளனர். ‘தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குச் சீட்டில் ஆளுங்கட்சியின் சின்னமான தாமரைக்குக் கீழே பிஜேபி என எழுதப்பட்டுள்ளது. இப்படி இருப்பது சட்ட விரோதமாகும். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று எதிர்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் புகார் அளித்துள்ளனர்.
எதிர்கட்சிகள் தரப்பில் மேலும், ‘பிஜேபி என்ற எழுத்து, ஆளுங்கட்சியின் சின்னத்துக்குக் கீழேயிருந்து நீக்கப்பட வேண்டும். அல்லது, அனைத்துக் கட்சிகளின் பெயர்களும் சேர்க்கப்பட வேண்டும்' என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சர்ச்சை குறித்து NDTV, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரிடம் பேசியது. “2013 நடுவில் பாஜக, தேர்தல் ஆணையத்தை அணுகி, தங்களது சின்னமான தாமரையின் வெளிப்புறம் மிகவும் மெல்லிய கொடால் உள்ளது. அது அடர்த்தியாக இருக்க வேண்டும் என்றது. அதன்படி மாற்றம் செய்யப்பட்டது. தாமரை சின்னத்துடன் வரும் நீரின் பிரதிபலிப்பும் அடர்த்தியாக்கப்பட்டது. அந்த பிரதிபலிப்புதான் F மற்றும் P போன்ற எழுத்துகள் போலத் தெரிகின்றன. அது கண்டிப்பாக BJP எனத் தெரியவில்லை” என்று விளக்கினார்.
காங்கிரஸ் மூத்த நிர்வாகி அபிஷேக் மனு சிங்வி, ‘வாக்கு இயந்திரத்தில், பிஜேபி என்கிற எழுத்து தெளிவாக தெரிகிறது. எந்தக் கட்சியும் சின்னம் மற்றும் பெயரை ஒரே இடத்தில் பயன்படுத்தக் கூடாது' என்றார்.
எதிர்கட்சிகள் இந்தப் பிரச்னையில் தீவிரம் காட்டினாலும், தேர்தல் ஆணையம் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்றுதான் நமக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன.