This Article is From Mar 23, 2020

சட்டமன்ற கூட்டத்தொடரைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரினை முன்கூட்டியே முடிப்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.

சட்டமன்ற கூட்டத்தொடரைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சிகள் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரினை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே ஏப்ரல் 9 வரை நடக்க இருந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 31 தேதியுடன் நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சிகள் நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரினை புறக்கணித்துள்ளன. தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இந்த புறக்கணிப்பினை முன்னெடுத்திருக்கின்றன. கொரோனா எதிரொலி காரணமாக ஏற்கெனவே பல முறை வலியுறுத்தியும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படாததால் தாங்கள் இந்த கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக தி.மு.க கொரடா சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்காமல், தனிமைப்படுத்தி கொள்வோம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத்தொடர் நடைபெறுகிறது. எனவே கூட்டத்தொடரினை தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரினை முன்கூட்டியே முடிப்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த ஆலோசனையில் அ.இ.அ.தி.மு.க  உறுப்பினர்கள் பங்கெடுத்துள்ளனர்.

.