This Article is From Dec 22, 2019

எதிர்கட்சியினர் போராட்டம்: நாளை போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை!

மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒரு அத்திவாசியமான போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பெற்று நடத்தும் நிறுவனம் என்பதும், நமது தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும். 

எதிர்கட்சியினர் போராட்டம்: நாளை போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை!

வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடைபெற உள்ள நிலையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது. 

அந்தவகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக சார்பில் நாளை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு அமைப்பினருக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதேபோல், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்கவும் திமுக அழைப்பு விடுத்திருந்தது. 

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், நம்முடைய மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒரு அத்திவாசியமான போக்குவரத்து சேவையை முழுவதுமாக பொறுப்பெற்று நடத்தும் நிறுவனம் என்பதும், நமது தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும். 

எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23-12-2019 அன்று வழக்கம் போல் பணிக்கு தவறாமல் ஆஜராக வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

23-12-2019 அன்று வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது மற்றும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

.