போராட்டத்தில் ஏறக்குறைய 10,000க்கும் மேலான காவல்துறையினரும் பங்கேற்று தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் - மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில், நேற்றைய தினம் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ப.சிதம்பரம், வீரமணி, கனிமொழி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று லட்சக்கணக்காணோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பல்வெறு முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றுது. இதற்காக அங்கு சுமார் 10,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கூட்டாக பங்கேற்றனர். அப்போது குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி தலைவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் தொடரும். சென்னையில் நடைபெற்றது 'பேரணி அல்ல: போர் அணி'.
சென்னையில் நடந்த இந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி. இந்த போராட்டத்தில் ஏறக்குறைய 10,000க்கும் மேலான காவல்துறையினரும் பங்கேற்று தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் பேரணி நடத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது எழும்பூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடியது, அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் அவர்கள மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.