பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் அண்ணாசிலை அருகே மதிமுக தொண்டர்களுடன் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்படுள்ளார்.
திருப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் வந்தடைந்த அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பிரதமர் மோடி வருகையை எதிர்த்து அண்ணாசிலை அருகே மதிமுக பொது செயலாளர் தலைமையில் தொண்டர்கள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11.15 மணி அளவில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் அருகே கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, போராட்டம் நடத்திய வைகோ உள்பட மதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது, தமிழருக்கு எதிராக செயல்படும் மோடி திருப்பூரை வீட்டுக்கு திரும்பி செல்லுமாறு மதிமுகவினர் முழக்கமிட்டனர். மேலும், போலீசாரை கண்டித்து தர்ணா, மறியல் போராட்டத்தில் மதிமுகவினர் ஈடுபட்டனர்.
இதனிடையே, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் அங்கிருந்த மின்மாற்றியில் ஏறி போராட்டத்திர் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதிமுக தொண்டர் மின்மாற்றியில் இருந்து இறங்கிவந்தார்.