காங்கிரஸ் கட்சி, அதன் மாநில தலைமைகளுக்கு, இன்று மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ அலுவலகங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்துமாறு கூறியுள்ளது
New Delhi: டெல்லியில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு இன்று எதிர்கட்சியினர் ஊர்வலமாக சென்று, அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்கட்சிகள், மத்திய அரசு தேவையில்லாமல் சிபிஐ அமைப்பின் நடவடிக்கைக்குள் தலையிடப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து மத்திய அரசு, இரண்டு அதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் அனுப்பி, இந்த விவராகம் குறித்து விசாரித்து வருகிறது.
சிபிஐ அமைப்புக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லியில் பேரணி நடந்தது. அதில் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
பேரணியின் பெரும் பகுதியினரை ராகுல் காந்தி வழி நடத்திச் சென்றார். அரசின் நடவடிக்கை குறித்து ராகுல், ‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தி விடக் கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு' என்று குற்றம் சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் கட்சி, அதன் மாநில தலைமைகளுக்கு, இன்று மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ அலுவலகங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்துமாறு கூறியுள்ளது. இதன்படி காங்கிரஸினர் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.