கோவாவில் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
Panaji: இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் எதிர்க்கட்சியினர் இப்போதே வாக்குப்பதிவு இயந்திரங்களை வில்லனாக சித்தரித்து பேசி வருகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாஜகவுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அவர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினர்.
இந்நிலையில், இன்று கோவாவில் உள்ள பாஜக தொண்டர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னர் வாக்குச்சீட்டு தேர்தல் முறையை எதிர்த்தவர்கள் இப்போது தங்களது நிறத்தை மாற்றிகொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூற தொடங்கியுள்ளனர். தோல்வி பயத்தில் இப்போதே வாக்குப்பதிவு இயந்திரங்களை வில்லனாக சித்தரித்து வருகின்றனர்.
கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் செல்வாக்கு கொண்டவர்களின் வாரிசு அல்லது அவர்களது சொந்த குழந்தைகளை அரசியலில் வளர்க்க முயற்சி செய்பவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைகிறார்கள்.
அவர்கள் பணம் பலம் கொண்டவர்கள், நாங்கள் மக்கள் பலம் கொண்டவர்கள். அவர்கள் அவர்களுக்குள்ளே கூட்டணி அமைத்து கொண்டவர்கள், நாங்கள் 125 கோடி மக்களுடன் கூட்டணி கொண்டுள்ளோம். எந்த கூட்டணி பலமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.