“தேனி மக்களின் குறையைத் தீர்ப்பதில் நான் அயராது பாடுபடுவேன்."
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார், வெற்றி வாகை சூடியுள்ளார். அதிமுக சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரேயொரு நாடாளுமன்ற வேட்பாளர் இவர்தான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பி.ஆர் வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அது குறித்து பேசிய ஓ.பி.ஆர், “தேனி மக்களின் குறையைத் தீர்ப்பதில் நான் அயராது பாடுபடுவேன். தேனி நாடாளுமன்றத் தொகுதியின் பல இடங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது. அதை நிரந்தரமாக தீர்க்கப் பாடுபடுவேன். தேனி மட்டுமல்லாது தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்க அதிமுக-வை வழிநடத்தும் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆலோசனைப்படி நான் செயல்படுவேன். மற்றப்படி, அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது எனது கனவல்ல” என்றார்.
டிடிவி தினகரன் குறித்து அவர் பேசுகையில், “மக்கள் அவர் மீதும், அவரின் கட்சி மீதும் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதாவது அவர் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று முடித்துக் கொண்டார்.
இன்று டெல்லியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க உள்ளனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை, மீண்டும் பிரதமர் பதவிக்கு முன் மொழிவார்கள் எனத் தெரிகிறது.