"குருமூர்த்தி, முதலில் அவர் ஆண்தானா என்பதை சோதித்துவிட்டுக் கருத்துச் சொல்ல வேண்டும்"
‘துக்ளக்' இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி (Auditor Gurumurthy), தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O.Panneer Selvam) பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக-வின் பதிலடி, குருமூர்த்தி, பின் வாங்கும் அளவுக்கு அமைந்துள்ளது.
திருச்சியில் துக்ளக் இதழின் பொன்விழாக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழக அரங்கத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திடம், அந்த பணிகள் சரியாக வந்து கொண்டிருக்கிறதா என்று மேற்பார்வையிடச் சொல்லியிருக்கிறார்கள். அதை என்னிடம் வந்து முறையிட்டார் ஓபிஎஸ். நான் அவரிடம் அந்த நேரத்தில் பேசியதையெல்லாம் வெளியே சொல்லவே முடியாது. நான், நீங்களெல்லாம் ஆம்பளையா என்று அவரிடம் கேட்டேன். பிறகு, அந்த அம்மா சமாதிக்குச் சென்று அமருங்கள். வழி பிறக்கும் என்றேன்,” எனப் பேசியுள்ளார்.
சசிகலா, அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் முதல்வராக பொறுப்பேற்க வைக்க அனைத்து வேலைகளும் நடந்தன. அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ், திடீரென்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘தர்மயுத்தம்' ஆரம்பித்துள்ளதாக தெரிவித்து, ‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்' இருப்பதாக சொல்லி அலறவிட்டார்.
அவரின் பதவி பிடுங்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். பின்னர் எடப்பாடியாரும் பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டனர். சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுக-விலிருந்து விலக்கப்பட்டனர். மீண்டும் எடப்பாடியுடன் இணைந்த பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லித்தான் ஓபிஎஸ், தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. அந்த ஆணையம் இன்று வரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகிறது. இறுதி முடிவு இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தர்மயுத்தத்தைச் சுற்றியே பல்வேறு சர்ச்சைகள் உலவி வரும் நிலையில், அதற்கு ஆரம்பப் புள்ளி வைத்தது தானே என்பது போல ஆடிட்டர் குருமூர்த்திப் பேசியுள்ளது அதிமுக-வினரை பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளது. இதற்கு முன்னரும் அவர் அதிமுக-வினரை ‘ஆண்மையற்றவர்கள்' என்று சாடியுள்ளார்.
இதற்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயக்குமார், “இது திமிர் பேச்சின் உச்சம். பொதுவாக நாவடக்கம் என்பது எல்லோருக்கும் தேவை. ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் குருமூர்த்தி சொன்னது ஆணவத்தின் உச்சம். யாருக்கு, தான் ஆண் இல்லை இல்லை என்கின்ற சந்தேகம் எழுகிறதோ, அவர்தான் மற்றவர்களின் ஆண்மைத்தன்மை குறித்து கேள்வியெழுப்புவார். அப்படிப் பார்த்தால் குருமூர்த்தி, முதலில் அவர் ஆண்தானா என்பதை சோதித்துவிட்டுக் கருத்துச் சொல்ல வேண்டும்.
நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் ட்விட்டர் மூலம் மழுப்பல் பதிலைக் கூறுகிறார். இது தேவையில்லாத சர்ச்சையாகும். அவர் ஒரு ஆடிட்டர், ஒரு பத்திரிகையாளர்… அந்த பணியை மட்டும் செய்தால் போதும்,” என்றார் தீர்க்கமாக.
அதிமுக-வின் எதிர்ப்பைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் குருமூர்த்தி, “ஓபிஎஸ்-ஸிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை.
இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயாவை ஆதரித்த துக்ளக், அவரே ஏற்ற சசிசகலாவை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன். எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல்தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து,” எனப் பதிவிட்டுள்ளார்.