This Article is From Jan 14, 2019

“அடுத்த கேள்விக்குப் போங்க…”- பத்திரிகையாளர் சந்திப்பில் உஷ்ணமான ஓபிஎஸ்

“கோடநாடு விவகாரத்தை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது” என்றதற்கு, “கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன

“அடுத்த கேள்விக்குப் போங்க…”- பத்திரிகையாளர் சந்திப்பில் உஷ்ணமான ஓபிஎஸ்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோடநாடு வீடியோ விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் திரும்ப திரும்ப கேள்வியெழுப்பிய நிலையில், அவர் ஒரு கட்டத்தில் எரிச்சலாகி, “அடுத்த கேள்விக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வத்திடம் “கோடநாடு விவகாரத்தை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது” என்றதற்கு, “கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், எங்கள் அரசியல் எதிரிகள் அதை இப்போது கையிலெடுத்து இருக்கிறார்கள். எங்களை எதிர்கொள்ள திராணியில்லாத சக்தியற்ற எதிர்கட்சிகளின் வேலை தான் அந்த வீடியோ வெளியீடு. அனைத்தும் ஆதரமற்ற குற்றச்சாட்டுகள். இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். நியாயம் எங்கள் பக்கம் உள்ளது” என்றார், தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அந்த விவகாரம் குறித்தே கேள்வியெழுப்ப முயன்றபோது, “அடுத்த கேள்விக்குப் போங்க” என்று உஷ்ணமானார்.

கூட்டணி குறித்து பேசிய ஓபிஎஸ், “தேர்தல் அறிவிக்கப்பட்டப் பின்னர் கூட்டணி குறித்து பேசி முடிவெடுப்போம். இப்போதைக்கு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. பிரதமர் வருகையோ, சந்திப்போ அதிகாரபூர்வமாக எங்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அப்படி வரும் பட்சத்தில், அது குறித்து என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுப்போம்” என்று முடித்துக் கொண்டார்.

தெஹெல்கா இதழின் முன்னாள் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தமாக ஒரு ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பங்களுக்கு அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தமிழக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக அரசு, அடுத்தடுத்த பலரை கைது செய்து வருகிறது.

.