OPS supports Ajith - "மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்"
OPS supports Ajith - நடிகர் அஜித் (Ajith) அரசியலுக்கு வர வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji), ஆதரவு கருத்துத் தெரிவித்திருந்தார். தற்போது அந்தக் கருத்தை வரவேற்றுள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS).
ராஜேந்திர பாலாஜி, முன்னர் பேசுகையில், “ரஜினி (Rajini), கமல் (Kamal), விஜய் (Vijay) ஆகியோர்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா? மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்,” என்று கூறினார்.
இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், “நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் இயக்கம் ஆரம்பிக்கலாம்; கட்சி ஆரம்பிக்கலாம். அதனால் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்வதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,” என படார் பதிலைக் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்கின்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் களமாடி வருகிறார். அடுத்ததாக, ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து அரசியல் பயணம் செய்யவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யும் தனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது என்பதை படத்துக்குப் படம் வெளிக்காட்டி வருகிறார். இவர்கள் அனைவரும் தமிழக ஆளுங்கட்சியான அதிமுக-வுக்கு எதிராக தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அரசியல் பேசாத அஜித்தை, அதிமுக மூத்த நிர்வாகிகள் கையிலெடுத்துள்ளனர்.