This Article is From Feb 05, 2019

‘ஓபிஎஸ் வாய் திறந்தால், ஜெ., மரண முடிச்சுகள் அவிழும்!’- சசிகலா தரப்பு உறுதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் ஒரு சில நாட்களில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்

‘ஓபிஎஸ் வாய் திறந்தால், ஜெ., மரண முடிச்சுகள் அவிழும்!’- சசிகலா தரப்பு உறுதி

சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன், ‘ஓ.பி.எஸ் வாய் திறந்தால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை காணப்படும்’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

ஹைலைட்ஸ்

  • 2016-ல் ஜெயலலிதா மரணமடைந்தார்
  • அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது
  • அதைத் தொடர்ந்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் ஒரு சில நாட்களில் வாக்குமூலம் அளிக்க உள்ளார். இந்நிலையில் சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன், ‘ஓ.பி.எஸ் வாய் திறந்தால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை காணப்படும்' என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவு 11:30 மணிக்கு அவர் இறந்த வரையில், பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்கள் குறித்தும், அது தொடர்பாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் பல முரணான தகவல்களை அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், தமிழக அரசு தரப்பும் கூறியுள்ளன. 

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், பல அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. வரும் 12 ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜராகும்படி ஆணையம், சம்மன் அனுப்பியுள்ளது. பன்னீர்செல்வம், ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுப்பதை தொடர்ந்து தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தோழியான சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தமிழக அரசு தரப்பில் இதுவரை ஆணையத்தின் முன்னர் ஆஜராகி பலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில், இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு விட்டன. தற்போது, ஓ.பி.எஸ்.ஸும் ஆஜராகி பேசிவிட்டால், மீதம் இருக்கும் முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும்' என்று கூறியுள்ளார். 


 

.