This Article is From May 17, 2019

’தேர்தல் முடிவுக்கு முன்பே எம்.பி.யான ஓ.பி.எஸ் மகன்’.. சர்ச்சையை கிளப்பிய கல்வெட்டு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்பியாகி விட்டதாக கல்வெட்டு வைத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement
தமிழ்நாடு Written by

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, வரும் மே.23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்பியாகி விட்டதாக கல்வெட்டு வைத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதில், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவனும் போட்டியிட்டனர். இந்த 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை வரும் மே.23ம் நடைபெறகிறது, அன்றைய தினமே தேர்தல் முடிவுகளின் படி யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவரும்.

Advertisement

ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே எம்.பி ஆனது போல் கோவில் கல்வெட்டில் பெயர் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. குச்சனூரில், உள்ள காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16ஆம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் அந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. இதில், ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், இடம்பெற்றது.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் அந்த கல்வெட்டின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவருக்கு எதிராக போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வனும், இளங்கோவனும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Advertisement

இந்நிலையில் கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, கோவில் கல்வெட்டில் இருந்து எம்.பி., என குறிப்பிடப்பட்ட ரவிந்தரநாத் பெயர் மறைக்கப்பட்டது.
 

Advertisement