நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில், 352 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவிந்தரநாத் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.
முன்னதாக, ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே எம்.பி ஆனது போல் கோவில் கல்வெட்டில் பெயர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. குச்சனூரில், உள்ள காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16ஆம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் அந்த கல்வெட்டில் இடம்பெற்றிருந்தன. இதில், ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், இடம்பெற்றது.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் அந்த கல்வெட்டின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கோவில் கல்வெட்டில் இருந்து எம்.பி., என குறிப்பிடப்பட்ட ரவிந்தரநாத் பெயர் உடனடியாக மறைக்கப்பட்டது. பின்பு, கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் சின்னமனூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்திய அமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத் சிக்கியுள்ளார்.