உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதைப் பாராட்டி கின்னஸ் அமைப்பு, தமிழக அரசுக்கு சான்றிதழ் கொடுத்துள்ளது. இது குறித்து பேச இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில், ‘உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் என்ற முறையில், தமிழகத்துக்கு மத்திய அரசு, 4வது முறையாக நமக்கு விருது கொடுத்திருக்கிறது. உடலுறுப்பு தானம் என்பதில் வழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சீரியப் பணியை செய்து வருகிறது.
இந்நிலையில் உடலுறுப்பு தானத்தில், கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது தமிழகம். அதற்கான சான்றிதழை நாம் பெற்றிருக்கிறோம். உடலுறுப்பு தானத்தை தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம். இது அடுத்தடுத்து பணிகள் செய்வதற்கு உத்வேகமாக இருக்கும்.
அடுத்தக்கட்டமாக உடலுறுப்பு தானத்தை முன்னெடுத்துச் செல்ல, இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் உறுப்பு தானங்கள் செய்வதற்கும் அதை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்துவதற்கும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வித நடவடிக்கையும் எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.