This Article is From Aug 01, 2019

அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன்… ஒசாமா பின்லாடனின் மகன்… ஹம்சா இறந்துவிட்டதாக தகவல்!

ஜிஹாத்தின் இளவரசர் என்று ஹம்சா அழைக்கப்பட்டு வந்தார்

அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன்… ஒசாமா பின்லாடனின் மகன்… ஹம்சா இறந்துவிட்டதாக தகவல்!

அபோட்டாபாத்தில் இருக்கும் ஒசாமாவின் வீட்டை சோதனையிட்டபோதுதான், ஹம்சா, அல்-கய்தா அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க வைக்க அனைத்து வேலைகளும் நடந்துவந்ததாக தெரியவந்தது

ஹைலைட்ஸ்

  • ஹம்சாவுக்குத் தற்போது 30 வயது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது
  • அல்-கய்தா அமைப்பின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்
  • அதிபர் ட்ரம்ப், ஹம்சா இறப்பு குறித்து எந்த கருத்தையும் சொல்லவில்லை
Washington:

அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவனாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஒசாமா பின்லாடனின் மகன் ஹம்ஸா இறந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

என்.பி.சி செய்தி நிறுவனம், “3 அமெரிக்க அரசு அதிகாரிகள், ஹம்சா இறந்துவிட்டதாக சொல்கின்றனர். ஆனால், எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் இல்லை” என்று கூறியுள்ளது. 

அதேபோல நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம், 2 அமெரிக்க அரசு அதிகாரிகள், ஹம்சா இறந்தது குறித்து உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் கேட்கப்பட்டதற்கு, “இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று மட்டும் சூசகமாக சொல்லியிருக்கிறார். 

கடந்த பிப்ரவரி மாதம், ஹம்சா பின்லாடன் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் சன்மானம் கொடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பு அறிவித்திருந்தது. ஆனால், இந்த காலக்கட்டத்துக்கு முன்னரே ஹம்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது சொல்லப்படுகிறது. 

ஒசாமா பின்லாடனின் 20 குழந்தைகளில் 15வது குழந்தை ஹம்சா என்று சொல்லப்படுகிறது. ஒசாமாவின் 3வது மனைவிக்குப் பிறந்தவர்தான் ஹம்சா. தற்போது அவருக்கு 30 வயது இருக்கலாம் என்றும், அல்-கய்தா அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க அவர் தயாராகி வந்ததாகவும் தெரிகிறது. 

ஜிஹாத்தின் இளவரசர் என்று ஹம்சா அழைக்கப்பட்டு வந்தார். அவர் தொடர்ந்து, “அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் மீது நாம் தாக்குதல் நடத்த வேண்டும். குறிப்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லாடனைக் கொன்றதற்கு பழி தீர்க்க வேண்டும்” என்று ஆடியோ மற்றும் வீடியோ மூலம் தனது ஆதரவாளருக்கு தெரிவித்து வந்ததகாவும் அமெரிக்க தரப்பு கூறுகிறது. 

அபோட்டாபாத்தில் இருக்கும் ஒசாமாவின் வீட்டை சோதனையிட்டபோதுதான், ஹம்சா, அல்-கய்தா அமைப்பின் தலைவராக பொறுப்பேற்க வைக்க அனைத்து வேலைகளும் நடந்துவந்ததாக தெரியவந்தது. ஹம்சாவுக்கும், அல்-கய்தாவின் மூத்த நிர்வாகி ஒருவரின் மகளுக்கும் ஈரானில் திருமணம் நடந்தது குறித்தும் அப்போது தெரிந்தது. 

ஹம்சா பின்லாடன் எங்கே வசித்து வந்தார் என்பது குறித்து சரியான தகவல்கள் வந்ததில்லை. அவர் ஈரானில் வீட்டுச் சிறையில் இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதே நேரத்தில் அப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியாவிலும் அவர் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது எனப்பட்டது. 

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதி கொடூரமான தீவிரவாத தாக்குதலை நடத்தியது அல்-கய்தா. அதைத் தொடர்ந்து அந்த அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வந்தது. குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்குப் பிறகு அல்-கய்தாவின் முக்கியத்துவம் குறைந்தது. 

ஆனால் அப்கானிஸ்தான், ஏமன், சிரியா மற்றும் பல்வேறு நாடுகளில் அல்-கய்தாவின் கிளை அமைப்புகள் உயிர்ப்போடுதான் இருந்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. 


 

.