வெளிமாநில வாகனங்கள் இன்று முதல் தமிழகத்திற்குள் நுழைய தடை!
ஹைலைட்ஸ்
- வெளிமாநில வாகனங்கள் இன்று முதல் தமிழகத்திற்குள் நுழைய தடை
- அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல் ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி
- நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவிப்பு
வெளிமாநில வாகனங்கள் இன்று முதல் மார்ச்.31ம் தேதி வரை தமிழகத்திற்குள் நுழைய தடை விதிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியும் நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார். அதன்படி பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள், அலுவலகங்கள், பஸ், ரயில்கள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும் பிரதமர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் கீழ் குறிப்பிட்டுள்ள வாகன போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக இன்று முதல் 31ம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த சாலைகளில், அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், காஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
மேலும், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள், பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படும். எனினும், இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டும். சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்க்கவும், அறுவை சிகிச்சை செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அதை முடிந்த வரை தள்ளி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எதுவும் இயங்காது. மெட்ரோ ரயில்களும் அன்றைய தினம் இயங்காது. தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளின் (மினி பஸ்) உரிமையாளர்கள் அரசின் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.