கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜன் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி பெற்ற கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இதனிடையே டிடிவி தினகரன் அணிக்குத் தாவிய 18 எம்.எல்.ஏக்கள் பட்டியலில் சுந்தர் ராஜனும் ஒருவர் என்பதால், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தில் அவரும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பில் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 தொகுதிகளை நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஒத்திவைத்தது. இதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வழக்கு தொடர்ந்த கிருஷ்ணசாமி, அதனை வாபஸ் பெற தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை முடித்து வைப்பதாகவும், தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு 18 தொகுதிகளுடன் இடைத்தேர்தல் நடக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.