வீரர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
ஹைலைட்ஸ்
- 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம்
- மோடி அனைத்து கட்சி கூட்டத்தில் பேச்சு
- சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை
New Delhi: சமீபத்தில் கிழக்கு லாடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் தமிழக வீரர் பழனி உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து கலந்தாலோசனை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தினை நேற்று நடத்தியிருந்தார். இதில்,
“சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.“ மேலும்,
“இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். நமது படை வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்ய ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக சீனாவிடம் எடுத்துரைத்துள்ளோம். இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. அதேவேளையில், இறையாண்மையை காப்பதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
“எல்லைப்பகுதியில் அதிகரித்து வரும் புதிய உள்கட்டமைப்பு காரணமாக ரோந்து நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் குறித்த உடனடி தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.“ என பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு பின்னர் இந்திய சீன எல்லையில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.