அமெரிக்காவுக்கான இந்திய தூதர் பொறுப்பிலிருந்து விலகும் ஹர்ஷ வர்தன் ட்ரம்பை சந்தித்து பேசியுள்ளார்.
Washington DC: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்து வரும் ஹர்ஷ வர்தன் ஷிரிங்களா, வெளியுறவு துறை செயலராக பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்காவுக்கான தூதர் பதவியில் இருந்து மாற்றப்படும் அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
அப்போது, இரு தரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக ஹர்ஷ வர்தனுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மத்திய வெளியுறவுத்துறை செயலராக ஷிரிங்களா விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக அமெரிக்க தூதரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சருமான ஆலிஸ் வெல்ஸ், இந்திய தூதர் ஹர்ஷ வர்தன் ஷிரிங்களாவை பாராட்டியுள்ளார். அவரை, ‘அமெரிக்கா – இந்தியா உறவுக்கு கேப்டனாக இருந்தவர்' என்று ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா – இந்தியா உறவுகள் தங்களது இலக்குகளை எட்டுவதற்காக ஷிரிங்களா தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என்றும் ஆலிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
ப்ளேர் இல்லத்தில் ஹர்ஷ வர்தனுக்கு விருந்து வைக்கப்பட்டது. இதனை வெள்ளை மாளிகையின் செயலர் கேன் ஹெண்டர்சன் நடத்தினார். இதில் குறிப்பிட்ட சில நாடுகளின் தூதர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
முன்னதாக டிசம்பர் 23-ம்தேதியன்று ஹர்ஷ வர்தன் ஷிரிங்களாவை வெளியுறவு செயலராக மத்திய அரசு அறிவித்தது. தற்போது விஜய் கேஷவ் கோகலே வெளியுறவு செயலராக உள்ளார்.அவரது பதவிக் காலம் ஜனவரி 28-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதன்பின்னர் ஷிரிங்களா ஜனவரி 29-ம்தேதி புதிய வெளியுறவு செயலராக பொறுப்பேற்கவுள்ளார்.