This Article is From Mar 18, 2020

ஈரானுக்கு புனிதப் பயணம் சென்ற 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு!!

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஈரானுக்கு புனிதப் பயணம் சென்ற 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு!!

மத்திய அரசு ஈரானுக்கு மருத்துவர்களை அனுப்பி வைத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • 800-க்கும் அதிகமானோர் ஈரானுக்கு புனிதப் பயணம் சென்றுள்ளனர்
  • ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்கிறது மத்திய அரசு
  • ஈரான் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது.
New Delhi:

ஈரானில் புனிதப் பயணம் சென்ற இந்தியர்கள் 250-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். 

லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து 800-க்கும் அதிகமானோர் ஈரானுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததால் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஈரானில் சிக்கிக் கொண்டனர்.

பெரும்பாலானவர்கள் ஈரானின் கோம் நகரில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர். இந்த நகரம் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. 

இதற்கிடையே, இந்திய மருத்துவர்களை புனேவிலிருந்து ஈரானுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அவர்கள் ஆய்வு செய்ததில் 254 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கார்கிலை சேர்ந்த வழக்கறிஞர் ஹாஜி முஸ்தபா என்பவர் கூறுகையில், 'எனது உறவினர்கள் உள்பட இந்தியர்கள் சிலர் ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை' என்றார். 

கடந்த வாரம் 200-க்கும் அதிகமான இந்தியர்கள் ஈரானிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். 

அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். அவர்கள் ஈரானின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வந்தனர். 

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், மொத்தம் 234 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். 

250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி தம்மு ரவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்கள் யார் என்ற விவரம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஈரானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இங்கிருந்து சென்றவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈரான் அரசுடன் இணைந்து அங்குள்ள இந்தியத் தூதரகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது' என்று தெரிவித்தார். 

.